நமது அன்பு சொந்தங்களே செய்யாறு வட்ட செங்குந்தர் சங்கத்தில் உறுப்பினராகி சமுதாயத்தை வலுப்படுத்துவீர்களாக .........

Sunday 17 August 2014

......மீண்டும் கதர் தேசிய உடையாக வேண்டும்

”.சின்னச் சின்ன இழை பின்னி வருகுது… சித்திரைக் கைத்தறி மின்னி வருகுது….. ”. என்று ஒரு பாடல் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியது. இந்தப்பாடலை எழுதுவதற்காக காஞ்சிபுரம் நெசவாளர் குடியிருப்பில் ஒரு வாரம் தங்கியிருந்தார். இடைவிடாமல் ஒரே சீரான தறிகளின் ஓசையின் மெட்டு மூலமாகவே மேற்கண்ட பாடலை எழுதினாராம். நெசவு நம் தேசத்தின் பழமையான தொழில். ஆடைகளின் அவசியத்தையும், அதன் நேர்த்தியையும் உலகிற்கு எடுத்துச் சொன்னவர்கள் நம் மூதாதையர்கள். சோழ நாடு சுமேரியாவோடும், எகிப்தோடும் வாணிப உறவு கொண்டிருந்த காலங்களில் நமது நாட்டின் பட்டாடைகளும், கைத்தறிகளும் தான் வெளிநாட்டினை ஈர்த்தன. நமது அரசர்கள் தங்களின் தேச விரிவாக்கப் போர்களால் தாங்களும் அழிந்து, தாங்கள் ஆட்சி செய்த தேசங்களையும் அழித்து, மண்ணோடு மண்ணாய் மடிந்து போனதற்குப் பின் வந்தேறிகளின் ராஜாங்கத்தில் உள்ளூர் தொழில்கள் கொஞ்சங்கொஞ்சமாய் நசுக்கப்பட்டது. சில நூற்றாண்டு கால நலிவிற்குப் பின் விடுதலை உணர்வு மேலோங்கிய காலங்களில் ”.சுதேசி”. என்ற முழக்கம் தீவிரமானது. மகாத்மா காந்தியடிகள் கைத்தறி ஆடைகளையே இந்தியர்கள் அணிய வேண்டும் என்று சொன்னபின் இந்திய நெசவு மீண்டும் புத்துயிர் பெற்றது. 1921-ல் மதுரையில் காந்தியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த எழுச்சி 1970 வரையில் கதர், கைத்தறி ஆடைகளின் அவசியத்தை தொடந்து வலியுறுத்தியது. நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையில் நெசவில் ஜொலித்தது. காஞ்சிபுரம், ஆரணி போன்ற பகுதிகள் பட்டாடைகளிலும், நாமக்கல் பகுதி கதராடைகளிலும், ஜொலித்தன. சின்னாளபட்டி கண்டாங்கிச் சேலைகள் கிராமப்புறங்களில் மிகமிக பிரபலமானது. கண்டாங்கிச் சேலைகள், சுங்கடிச் சேலைகள் என்றும், கதர்வேட்டிகள், வாயில்வேட்டிகள் என்றும் சாமானிய மனிதர்களின் தயாரிப்புகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. மானாவாரியாகவும், பாசனமுறையிலும் பருத்திச் சாகுபடியும் நன்றாகவே நடந்தது. உள்ளூர் அளவிலும் பல கிராமங்களை ஒருங்கிணைக்கும் சிறு நகரங்கள் அளவிலும் பருத்திஆலைகள் பெருகின. பருத்தி, பருத்தி ஆலைகள், நெசவு என்ற மூன்று நிலைப் பணிகளின் மூலம் வேலைவாய்ப்பும் பெருகின. இந்த கால கட்டங்களில்தான் ராஜபாளையம், தேனி போன்ற சிறு நகரங்களிலும், மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களிலும் பருத்தியை மையப் படுத்தும் தொழிற்சாலைகள் பெருகின. ஆலைகளின் பெருக்கத்திற்கு ஏற்ப விரைவாக பருத்தியை விளைவிக்கவும், நிறைய மகசூல் எடுக்கவும் ”.பசுமைப்புரட்சி”. என்ற பெயரில் ஒட்டு ரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவை பகுத்தப்பட்டன. இவை அறிமுகப் படுத்தப் பட்ட பின் அடுத்த 5 ஆண்டுகளில் பருத்தி உற்பத்தி குறையத் தொடங்கியது. இதே கால கட்டத்தில் தான் ஆடை உற்பத்தியில் அதி நவீன மாற்றம் என்ற பெயரில் பெரு முதலாளிகளின் கம்பெனிகள் ஈடுபட்டன. ”.பாம்பே டயிங்”. போன்ற நிறுவனங்கள் நுழைந்த பின் உள்ளூர் தயாரிப்புகளுக்கான கச்சாப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இந்த தேக்கத்தை உடைக்க நெசவாளர் சங்கங்கள் தொடங்கப்பட்டன. சங்கத்தின் மூலம் நூல் வாங்கவும், துணிகளை விற்பனை செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டது. இவை தவிர சர்வோதய சங்கங்களும் கதர் துணிகளை விற்பனை செய்வதைத் துரிதப் படுத்தின. எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் திட்டமிடாத, தொலை நோக்கில்லாத அமைப்புகளாகளாலும், செயல்திறன் இல்லாத சுய நலம் கொண்ட அதிகாரிகளாலும் நமது பாரம்பரிய நெசவுத் தொழில் கொஞ்சங்கொஞ்சமாய் நைந்து கொண்டிருக்கிறது. சொற்பமாய் ஓடிக் கொண்டிருக்கும் தறிகள் கூட அரசாங்கத்தின் இலவச வேட்டி சேலை சீருடைத் திட்டத்தை நம்பியே சோகமாய் சத்தமிக்கின்றன. கடந்த 2002-ம் ஆண்டு அரசாங்கம் கொள்முதல் செய்வதை நிறுத்தியதால் பல கதர் போர்டுகள் மூடப்பட்டன. நிறைய மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்தார்கள். இதன் விளைவு? அனு விஞ்ஞானி அப்துல் கலாம் ஜனாதிபதியாய் பதவி ஏற்ற நான்காவது நாள் அவரது பழைய ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவில்லிபுத்தூருக்கு அருகில் உள்ள ராமச்சந்திராபுரம் என்ற நெசவாளர் கிராமத்தில் கஞ்சியில்லாமல் எட்டு நெசவாளர்கள் செத்துப் போனார்கள். ராமச்சந்திராபுரம், ராசிபுரம், காஞ்சிபுரம், நாமக்கல், சக்கம்பட்டி, சின்னாளபட்டி, சுந்தரபாண்டியம், மதுரை என பரந்து கிடக்கும் நெசவாளர்களின் குடும்பங்கள் எல்லாம் எதிர்கால வாழ்க்கையை அல்ல அடுத்த வேளை கூழையே கவலையோடு எதிர்பார்த்து நின்றன. பாரம்பரியமாக நெசவுத்தொழில் செய்து வரும் சாலியர், செங்குந்தர், முதலியார் சமூக மக்கள் மாற்றுத் தொழில் இல்லாமல் வறுமையில் வாடத்தொடங்கினார்கள். பசியால் இருப்பவர்களுக்காக அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கஞ்சித் தொட்டி திறந்தார்கள். இதைக் கண்ட தி.மு.க.வினர் அன்றைய அரசைக்குறைகூறும நோக்கில,அரசியல் ரீதியில் அவர்களும் கஞ்சித் தொட்டி திறக்க, ஆளும் கட்சிக்காரர்கள் பிரியாணி கொடுக்க நாடு முழுவதும் இந்த அரசியல் கூத்து நடந்தேறியது. இதில் வேடிக்கை என்னவென்றால் நமது அரசியல் வாதிகள் 90% பேர் உடுத்தவது கதர் மற்றும் கைத்தறி ஆடைகள் தான். ஆனாலும் இந்த கோமாளித்தனங்களுக்கு மத்தியில் சமூக அக்கறை கொண்ட பல கல்லூரிகளின் நிர்வாகம் மாணவர்களும், மாணவியரும் கைத்தறி ஆடைகள் அணிய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தன. பல தொண்டு நிறுவனங்கள் கதராடைகளை விற்பனை செய்து நெசவாளர்களின் பிணி போக்க உதவின. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அரசாங்கம் நெசவு செய்த துணிகளை கொள்முதல் செய்தது. நடந்த தேர்தலை நினைவில் கொண்டே இது நிகழ்ந்தாலும் இது சரியான தீர்வாகாது. நெசவு நமது தேசியத்தின் உயிர்நாடி. தறியும், ராட்டையும் இசைக்கின்ற இசையில்தான் நம் தேசிய கீதம் உயிரோட்டம் பெற வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி நமது பொருளாதாரத்தைப் பெருக்குவது போலொரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அதன் வளர்ச்சி என்பது நமது பாரம்பரியத் தொழிலின் நசிவுலிருந்து தான் தொடங்குகிறது, மூடிக்கிடக்கும் கூட்டுறவு சங்கங்களை உடனடியாகத் திறக்க வேண்டும். உள்ளூர் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விதமாக நெசவாளர்கள் நெய்து முடித்த உடனே தேக்கமின்றி துணிகளை அரசாங்கமே நேரடிக் கொள்முதல் செய்ய வேண்டும். நெசவாவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3% வட்டி மாணியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை உடனே வழங்க வேண்டும். நெசவாளர் சங்கங்களின் வீழ்ச்சிக்குப் பெரிதும் காரணமாக இருக்கும் தனியதிகாரிகளை பணி நீக்கம் செய்வதோடு அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். சட்டங்கள் போடுவதாலும், சங்கங்கள் அமைப்பதாலும் மட்டுமே நெசவை நாம் காப்பாற்ற முடியாது. கைத்தறிகளும், விசைத்தறிகளும் இடைவிடாமல் ஓசை எழுப்பிக் கொண்டே இருக்க வேண்டும் எனில் ஒவ்வொரு குடிமகனும் உதவ வேண்டும். ஆண்டில் பாதி நாளாவது கதராடைகள் அணிய வேண்டும். குடும்பங்களின் நல்ல நாளில் கதராடைகளை மற்றவர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். சமீப காலங்களாக ஆடைகளின் அடையாளங்களை திரைப்படங்களும் சின்னத்திரையும் தான் வெளிப்படுத்துகினறன. மெட்டி ஒலி, அண்ணாமலை, சித்தி, கோலங்கள், படையப்பா, ஆட்டோகிராப் என சேலைகளின் பெயர்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த மாயையிலிருந்து முழுமையாய் மீள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலங்களில் கதர் எப்படி தேசிய உடையாக இருந்ததோ அதே போல இன்றைய இக்கட்டான காலத்தில் மீண்டும் கதர் தேசிய உடையாக வேண்டும். இந்த எழுச்சி அரசாணையிலிருந்து தொடங்குகிறதா….. அறிவாணையிலிருந்து தொடங்குகிறதா என்பதை தயங்கித் தயங்கி கவலையோடு துடித்துக் கொண்டிருக்கும் தறிகளைப் போலவே நாமும் கூர்நது நோக்குவோம். (ஏப்ரல் 2009 பசுமைத்தாயகம் இதழில் வெளியான கட்டுரை)

No comments: